அம்பன் பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியை மீள வழங்குமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டியை மீளவும் வழங்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரவு வேளைகளில் மருத்துவ சேவைகள் இடம்பெறாமையினால், இரவு நேரங்களில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்புவது வழமையாக இருந்து வருகின்றது.
சொந்தமான நோயாளர் காவு வண்டி

இந்நிலையில், அம்பன் பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டி வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அம்பன் பிரதேச வைத்தியசாலையை நாடும் நோயாளர்கள், குறிப்பாக இரவு வேளைகளில் அவசர சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்பன் பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டியை மீளவும் அதே வைத்தியசாலைக்கு வழங்குமாறு கோரி, இன்று (15.11.2026) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலைக்கு முன்பாக கிராம மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பன் பிரதேச வைத்தியசாலையைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் 2,500 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
