யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம் (Video)
யாழிலில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்று (31.01.2023) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே வழக்கு விசாரணையை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
ஜனவரி 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நேற்று (3101.2023) நடைபெற்றுள்ளது.
நீதிமன்ற அழைப்பாணைக்கமைய வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர், பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் நேற்றைய தினம் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
இந்தநிலையில், தலா ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதவான் ஏ.ஆனந்தராஜா பெப்ரவரி 28ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
ஆறு பேருக்கு அழைப்பாணை
மேலும், ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள்,
சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்து கோரிக்கைகளை முன் வைக்கும் எமது பயணம் அற மற்றும் அமைதி வழியில் இருக்கிறது. அதனடிப்படையில் பயணம் தொடரும்.
அமைதி வழி பேரணிகளிலும் எமது பங்களிப்பு
எதிர்வரும் நாட்களில் பல்கலை மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புகள், சிவில் சமூகம் முன்னெடுக்கும் அமைதி வழி பேரணிகளிலும் எமது பங்களிப்பு இருக்கும். இவ்வாறான பயணத்திற்கு தமிழ் தேசியத்தின் பால் அக்கறையுடைய அனைத்து தரப்புகளும் விழிப்படைய வேண்டும்.
உங்களின் சார்பிலும், இனம் சார்ந்துமே நாங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றோம். மாறாக எமது தனிப்பட்ட தேவைகளோ, பிரச்சினைகளோ கருதி முன்னிலைப்படுத்தப்படவில்லை. அந்த வகையில் இன்று தான் முதன்முதலான அனுபவம் கிடைக்கபெற்றுள்ளது.
ஒரு இனத்தின் விடுதலையினை நோக்கிய பயணத்தில் பல தடை கற்கள் வரும். அவைகளினை கடக்க வேண்டும் என்ற இலட்சிய வேகத்தினையும் ஊந்து சக்தியினையும் இந்த அனுபவம் தருகின்றது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 30 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
