குடமுருட்டி குளத்தினை இரண்டாக பிரிக்க வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்
குடமுருட்டி குளத்தினை இரண்டாக பிரிக்க வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் குடமுருட்டி குளத்தின் அணைக்கட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை விவசாயிகள் கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த குளமானது 2016ம் ஆண்டு பாரிய நீர்பாசன குளமாக மாற்றப்பட்டு விவசாயிகளிற்கு சிறுபோக செய்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் 110 விவசாயிகளிற்கு சிறுபோக செய்கைக்காக வழங்கப்பட்டது. குடிமுருட்டி வாய்க்கால் ஊடாக செல்லும் நீரை குறித்த குளத்தில் மறித்து அபிவிருத்தி செய்யப்பட்டது.
இந்த அபிவிருத்தியின் ஊடாக மேலும் 600 ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2013ம் ஆண்டு அடிப்படையில் நீர் கூடுதலாக இருப்பதாலும், காரியம்பிட்டி பகுதியில் நிலங்கள் கூடுதலாக இருப்பதாலும் அங்குள்ள 80 பயனாளிகளை எம்முடன் தற்காலிக இணைப்பாக இணைத்து அவர்களுடன் 334 பயனாளிகளாக உள்வாங்கப்பட்டனர்.
காலம் காலமாக விவசாயம் செய்துவரும் எமக்கு தலா 1.5 ஏக்கர் செய்கை நிலம் மாத்திரமே உள்ளது. அதனை நம்பியே எங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது.
அவ்வாறு குறித்த குளத்தினை இரண்டு பங்குகளாக பிரிப்பதனால் எமக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். குறித்த தரப்பினர், மானாவாரி நிலத்தினை நம்பியே செய்கை மேற்கொண்டு வந்தனர். அவர்களிற்கு மிக இருகில் இரண்டு குளங்கள் உள்ளது.
அந்த குளத்தினை மையப்படுத்தி கமக்கார அமைப்பாக பதிவு செய்வதே பொருத்தமானது. அதை விடுத்து, எமது வாழ்வாதார குளத்தினை இரண்டாக பிரித்து அதனை துண்டாட நினைப்பது எமது வாழ்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கும்.
இந்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம். ஆனாலும் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். எமது இந்த பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு பெற்று தர வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



