மட்டக்களப்பில் மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (Photos)
மட்டக்களப்பு- மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் மதுபானசாலைகள் அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் (17.07.2023) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுணதீவு கிளையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.
இதன்போது மதுபானசாலைக்கு எதிராக கோசங்கள் எழுப்பட்டதுடன் மதுபானசாலை அமைக்கும் எண்ணத்தையே கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மக்களின் எதிர்ப்பே அவசியம்
"மதுபானசாலை எமக்கு வேண்டாம், கிழக்கினை மீட்க சாராயக்கடையா, மண்முனை மேற்கை அழிக்க மூன்று மதுபானக்கடைகளா?" போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
"இந்த பகுதியில் இதற்கு முன்னரும் மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதிகோரப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பினை காரணம்காட்டி அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையெனவும் மக்கள் எதிர்ப்புகள் இருந்தால் அவ்வாறான விடயங்களுக்கு அனுமதி வழங்கப்படாது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,மண்முனை மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






