யாழ்.வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக மாணவர்களால் போராட்டம்!(Video)
யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (25.07.2023) ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
போராட்டத்தின் நோக்கம்

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் அப்பகுதி மக்களும் கடந்த திங்கட்கிழமை (17.07.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், எமது பாடசாலை 80 வருட கால இந்து பாரம்பரியத்தை கொண்ட பாடசாலையாகக் காணப்படுகின்ற நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் பிற மதம் ஒன்றை சார்ந்தவராக காணப்படுகிறார்.
எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
அத்துடன் திருக்கேதீஸ்வர திருவிழாவையும் நாங்கள் எங்களது பாடசாலையில் முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் பாடசாலைக்கு வருகை தரும் அதிபர் எமது மத சம்பிரதாயங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் குறைந்தவர் ஆகையால் அவரை மாற்றி இந்துப் பாரம்பரியங்களைக் கொண்ட அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேற்று மதத்தை சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |