அமைச்சர்களின் அதிகாரத்தை குறைக்கும் உத்தேச ஒலிபரப்பு சட்டமூலம் : சாந்த பண்டார
உத்தேச ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் ஊடக அமைச்சர்களின் அதிகாரம் கூட குறைக்கப்படும் என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
உத்தேச ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான விடயங்களை நேற்று (21.06.2023) நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை எந்த நேரத்திலும் இரத்து செய்யும் அதிகாரம் ஊடகங்களுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து மாத்திரமே நாடாளுமன்றத்தில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இரத்து செய்யும் உரிமை
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை எந்த நேரத்திலும் இரத்து செய்ய ஊடகத்துறை அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.
இருப்பினும், உத்தேச சட்டம் இந்த அதிகாரத்தைப் பறிக்கும். இந்த சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பான முறையான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
எனவே, புதிய சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் உரிமை ஊடகத்துறை அமைச்சருக்கு இருக்காது என தெரிவித்துள்ளார்.
திருத்தங்களை முன்மொழிய அழைப்பு
மேலும், “எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைப் போன்று ஊடகங்களை அடக்குவதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பதிலளித்த அவர், ஜனாதிபதியும் அரசாங்கமும் உத்தேச சட்டத்தின் மூலம் ஊடகங்களை அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளார்.
புதிய சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்றைப் பழிவாங்க ஜனாதிபதி முனைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் குற்றச்சாட்டையும் இராஜாங்க அமைச்சர் நிராகரித்துள்ளார்.
நாங்கள் நெகிழ்வாக இருக்கத் தயாராக இருக்கிறோம் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடக சங்கங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களைப் பயனுள்ள திருத்தங்களை முன்மொழிய அழைப்பு விடுக்கிறோம், ஒலிபரப்பு ஆணையம் அமைப்பது தொடர்பான கருத்துரு ஏற்கனவே திருத்தப்பட்டுள்ளது" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




