தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் நீடிக்கின்றது என அறுவுறுத்தப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் இன்று மேலும் தெரிவித்துள்ளதாவது,
இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடும்.
இந்த குறைந்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தின் காரணமாக, வடக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும், புதன்கிழமை(02) முதல் மார்ச் 4ஆம், திகதி வரையான காலப்பகுதியில், மழையுடனான வானிலை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், மாத்தளை நுவரெலியா, மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். அப்பிரதேசங்களில் 75மில்லி மீற்றருக்கும் அதிகமான கன மழையை எதிர்பார்க்கலாம்.
வட மாகாணத்திலும், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மாவட்டங்களிலும், பல தடவைகள் மழை பெய்யும், சப்ரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும், சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு வடமத்திய, கிழக்கு, வட மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மத்திய மலையகத்தின் கிழக்குச் சரிவகத்திலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது, அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில உருவாகியிருக்கின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மறு அறிவித்தல் வரும் வரையில் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரை, குறித்த கடல் பிராந்தியங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு கடற்பரப்புக்களிலுள்ள, மீனவ
மற்றும் கடற்படையினர், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், எதிர்கால
காலநிலை முன்னறிவிப்புக்கள் சம்பந்தமாக அவதானமாக செயற்படுமாறும் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



