ஊரடங்கு நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு தடை விதிப்பு: யாழில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைக் கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுமாறு யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணித்ததன் காரணமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு முன்னால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டதன் காரணமாக இன்றையதினம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
சமகால நிலைமைகள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரனின் ஊடக சந்திப்புக்காக ஊடகவியலாளர்கள் கட்சி அலுவலகத்துக்குச் சென்றபோது பொலிஸார் அதற்கு அனுமதிக்காததால் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் பெயர்,விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், ஊடக சந்திப்புக்களை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளர்களை, யாழ்ப்பாண பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுமாறு உத்தரவிட்ட நிலையில் இதனையடுத்து பொலிஸாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அதிகளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு எதுவும் நடத்த முடியாது என்று யாழில் பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அலுவலகத்திற்குச் செய்தியாளர்கள் சென்ற வேளை, அவ்விடத்தில் திரண்ட பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தியதுடன், இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தியிருப்பதால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், செய்தியாளர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன பதிவு செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




