பண்டோரா விவாகாரம்! - விசாரணை முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
பண்டோரா ஆவணங்களில் வெளிவந்துள்ள இலங்கையர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்துள்ளது.
பண்டோரா ஆவணம் தொடர்பான விசாரணை முன்னேற்ற அறிக்கையை கையூட்டல் விசாரணை ஆணைக்குழு இன்று ஜனாதிபதியிடம் கையளித்தது.
பண்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்ட, இலங்கையர்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இது தொடர்பான அறிவித்தல் ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி அனுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.கே.டி விஜேரத்ன, கடந்த 8 ஆம் திகதி அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளதாகவும், தற்போது அவை கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் விசாரணை முடிவடையவில்லை என்றும், தற்போது கோரப்பட்டுள்ள ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.