விசேட தேவையுடையவர்களுக்கான கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் முதலாம் இரண்டாம் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றையதினம் இதுவரையில் எந்தவித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பிரதேச வைத்தியசாலைகள் ஊடாகவும், நடமாடும் சேவைகள் ஊடாகவும் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு கோட்டைமுனை ஆரம்ப மருத்துவ சிகிச்சைப்பிரிவு, திராய்மடு பிரதேச வைத்தியசாலை, திருச்செந்தூர் ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வைத்தியசாலைகளில் இன்றைய தினமும் பெருமளவானோர் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வதற்கு வருகைதந்ததைக் காணமுடிந்தது.
இதேபோன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நடமாடும் வைத்திய பிரிவினர் இன்றைய தினம் வீடுகளில் நடமாட முடியாத நிலையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதனின் தலைமையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி நடவடிக்கையில் 97வயதுடைய மூதாட்டி ஒருவரும் தனது முதலாவது தடுப்பூசியினை ஏற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.