முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: நேரில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்றையதினம்(17.06.2023) முல்லைத்தீவு மாவட்ட கட்டளை தளபதியுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
அந்தவகையில், வட்டுவாகல் பிரதேச கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் இறங்கு துறைக்கு செல்வதற்கு பொருத்தமான வீதியைப் புனரமைத்து கடற்றொழிலாளர்களின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட்டுவாகல் கடற்கரை வீதி இராணுவ முகாம் பகுதிக்குள் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
பாரம்பரிய வழிப்பாடுகள்
இதனால் வட்டுவாகல் இறங்கு துறைக்கான கடற்கரை வீதி முழுமையாக விடுவிக்கப்படும் வரையில், தற்காலிக ஏற்பாடாக பாடசாலை வீதியை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வீதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், பாதையை புனரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அத்துடன், வட்டுவாகல் சப்தகன்னி (கண்ணகி அம்மன்) ஆலயத்தின் தீர்த்தோற்சவ காலத்தில் பாரம்பரிய வழிப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற, தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்ப மரப் பிரதேசம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மீண்டும் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் கடந்த காலங்களில் இராணுவ முகாம் வளாகத்தினுள் அமைந்திருந்த நிலையில், பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த இடத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
சட்டவிரோத தொழில் முறைகள்
அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
குறிப்பாக, சட்டவிரோத தொழில் முறையான வெளிச்சம் பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வருடத்தில் சுமார் 38 படகுகளை கைப்பற்றி நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியிருப்பதாக கடற்றொழில் திணைக்களத்தினர் தெரிவிக்கின்ற போதிலும் வெளிச்சம் பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்ந்தும் இருப்பதாக கடற்றொழில் சங்க பிரதிநிதிகளினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதேபோன்று, நந்திக்கடல், நாயாறு போன்ற களப்பு பகுதிகளிலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத தொழில் முறைகள் காரணமாக சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவை தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், சட்ட ஏற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகளும் இவ்வாறான சட்ட விரோத தொழில் முறைகள் தொடர்வதற்கு ஏதுவாக இருப்பதானால், இந்த வருட இறுதிக்குள் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானியை வெளியிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
