பிரான்ஸில் வாழும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலின் போது வெளிநாட்டவர்கள் கடும் சிரமங்களுக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் வாழும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், பிரெஞ்சு மொழியில் உள்ள ஒன்லைன் தளங்களை அணுகுவதற்கு கடுமையாக போராடுவதாக பிரெஞ்சு உரிமைகள் பாதுகாவலர் என அமைப்பு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகள் பலருக்கும் நன்மையான விடயமாகும். ஏனெனில் இது விடயங்களை எளிதாக்குகிறது, ஆனால் இது அனைவருக்கும் நல்லதல்ல என குறித்த அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் 200க்கும் மேற்பட்ட சேவைகள் ஒன்லைனில் கிடைக்கின்றன, இதில் வரிகளை அறிவிப்பது, வெளிநாடுகளில் இருந்து வாக்களிப்பது, கல்லூரி அல்லது சாரதி அனுமதி பத்திரம் பதிவு செய்தல் அல்லது மரங்களை வெட்ட அனுமதி கேட்பது என அனைத்து விதமான விடயங்களும் உள்ளடங்குகின்றது.
2022 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைவதற்குள் 250 சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது சமத்துவமின்மையை உருவாக்குகிறது என பிரெஞ்சு உரிமைகள் பாதுகாவலர் அமைப்பின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரெஞ்சு மொழியில் மாத்திரம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு மக்களின் வாழ்க்கை கடினமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நமது சமூக ஒற்றுமை, நமது பொதுவான உணர்வுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் ஜனநாயக முறையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தங்களுக்கு இலகுவான மொழிகளை தெரிவு செய்து, டிஜிட்டல் சேவைகளை வெளிநாட்டு மக்கள் சேவையை பெறும் வகையில் சேவைகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
