தனியார்த்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பு
பணிக்கு வரும் போது அல்லது பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீடு தனியார்த்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஊழியர் கட்டளைச் சட்டத்தின் சரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
1934ஆம் ஆண்டு 19ஆம் இலக்க ஊழியர் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களைப் போலவே தனியார்த்துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீடு, தனியார்த்துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் வகையில் ஊழியர் கட்டளைச் சட்டத்தின் சரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.
அதேபோல், பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 500,000 ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



