நாளை நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவையில் ஏற்படவுள்ள பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் பொருளாதார பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நட்டத்துடன் இயங்கும் பேருந்துகள்
பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை. டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பேருந்து கட்டணங்கள் 20% முதல் 25% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 25% பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்
8 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து சேவைகளில் இருந்து முற்றாக விலகத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது பேருந்து சேவைகளை 50% ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஒருபோதும் எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... புகைப்படங்கள் இதோ Cineulagam