மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது
பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறை அதிகாரி கைது
இந்தச் சம்பவம் தொடர்பில், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கல்கிசை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதியொருவர் வட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் தொடர்பில் தகவல் வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டு, அதனை பொரளை வனாத்த வீதியில் வைத்து மற்றொரு நபரிடம் ஒப்படைக்கத் தயாராகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த நபரொருவர் சந்தேகநபருக்கு அருகில் சென்று போதைப்பொருள் அடங்கிய பொதியைப் பெற முற்பட்டுள்ளார்.
அப்போது மறைந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கடந்த ஜனவரி மாதமே மெகசின் சிறைச்சாலையில் பணியில் இணைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய குறித்த சிறைச்சாலை அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.