வெலிக்கடை உள்ளிட்ட முக்கிய சிறைச்சாலைகளில் கைதிகள் இடையே பரவும் நோய்
வெலிக்கடை உள்ளிட்ட முக்கிய சிறைச்சாலைகளில் கைதிகள் இடையே சின்னம்மை நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிக்கடை, மகசின் மற்றும் கொழும்பு ரிமாண்ட் ஆகிய சிறைச்சாலைகளில் சின்னம்மை நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சிறைச்சாலை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு வரும் 11 ஆம் திகதி முதல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேகும்புர தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கைதிகளில் ஒருவருக்குச் சின்னம்மை நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் கொழும்பு, கல்கிசை, மொரட்டுவ, ஹொரண உள்ளிட்ட பல நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள நிலையில், பெரும்பாலான கைதிகள் நீதிமன்றங்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்படாமல் "ஸ்கைப் தொழில்நுட்பம்" ஊடாக வழக்கு நடவடிக்கைகளுக்கு முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல், சிறையிலிருந்தவாறே ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சிறைச்சாலை அதிகாரிகளையும் கைதிகளையும் பாதுகாக்கும் நோக்கில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நேற்று வரை 900-க்கும் அதிகமானோருக்குச் சின்னம்மை தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத காரணத்தினால், கொழும்பு மற்றும் அதற்குட்பட்ட பல நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வருகை தாமதமாகும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் Rolls Royce கார் வரும்... மகாநதி சீரியல் நடிகை பரபரப்பு புகார்... Cineulagam