மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை - நஸீர் அஹமட் (Photos)
மக்கள் நலன்சார்ந்த வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற வேலைத்திட்டங்களுக்கு தான் இந்த அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் (Hafiz Nasir Ahmed) தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான இறுதி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களை செய்து அதற்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு ஏற்ப எதிர்காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றக்கூடிய வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்ற அரசாங்க அதிகாரிகள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வீதி, கல்வி, சுகாதாரம், விவசாயம், வாழ்வாதார உதவிகள் என்று 45 வேலைத் திட்டங்கள் நாற்பது மில்லியன் ரூபாவில் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செலாளர் வீ.தவராஜா (V.Thavaraja) தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் வீ.தவராஜா, பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டனர்.




