நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம்
நாடு முழுவதும் உள்ள 100 வலய கல்வி அலுவலகங்களிற்கு முன்பாக பாடசாலை அதிபர் ஆசிரியரினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (12) பிற்பகல் 01 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குதல். கல்வி சுமையை பெற்றோர் மீது சுமத்துவதை உடனடியாக நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மற்றும் கலகத் தடுப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - டில்ஷான்
முல்லைத்தீவு
ஆசிரியர் அதிபர் தொழில்சங்க கூட்டமைப்பு கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் 50 பேர் வரை கலந்து கொண்டுள்ளதுடன் கையில் பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் மீதி பங்கை கொடு,ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கு,இலவச கல்வியின் தரத்தினை உறுதி செய்,பெற்றோரிடம் பணம் அறவீட்டினை நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகைள தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி - கீதன்
மன்னார்
அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று (2) மதியம் 2 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த ஆர்பாட்டம் பேரணியாக வலயக்கல்வி பணிமனை வரை சென்றது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ஆஷிக்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - ஏறாவூரில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டின் எஞ்சிய 2/3 ஐ பெறவும் , அதிபர் சேவையின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சு உப குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் , பிள்ளைகளின் கல்வி உரிமையை நிலை நாட்டவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களுடைய கல்வி உரிமைகள் தொடர்பாகவும் , மாணவர்களுடைய மந்த போசாக்கு காரணமாகவும், கல்விக் கொள்கையில் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது போன்ற காரணங்களை வலியுறுத்தி நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம் என ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - நிலா
கல்முனை
சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளது.
கல்முனை வாடி வீட்டு வீதியில் இருந்து இன்று(12) பேரணியாக கல்முனை மாநகர பகுதிக்கு சென்று இப்போராட்டத்தை முன்னெடுத்ததுடன் சுபோதினி என்ற அறிக்கை ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறித்த போராட்டமானது நாடளாவிய ரீதியாக சகல கல்வி வலயங்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதிபர் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி-பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம்
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் யாழ் மாவட்ட அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக இன்று(06) மாலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் யாழ் மாவட்ட அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக இன்று(06) மாலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா
சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல்வேறுகோரிக்கைகளை முன்னிறுத்தி வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இரண்டு மணியளவில் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் அங்கிருந்து வவுனியா தெற்கு வலய கேள்வி பணிமனை வரை ஊர்வலமாக சென்று அவ்விடத்தில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.