எப்ஸ்டீன் ஆவணங்களினால் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மேலும் நெருக்கடி
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சுற்றி நீடித்து வரும் எப்ஸ்டீன் சர்ச்சை தற்போது புதிய பரிமாணத்தை எடுத்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அண்மைய “எப்ஸ்டீன் ஆவணங்கள்” மூலம், இளவரசிகளான பியட்ரிஸ் மற்றும் இயுஜின் ஆகியோரின் பெயர்கள் நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் அவர்களின் பெற்றோர் இளவரசர் அன்ட்றூ மற்றும் சாரா பெர்குசன் ஆகியோரைச் சுற்றிய சர்ச்சையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க நிதியாளர் மற்றும் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், இளவரசிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறைவாசம் முடிந்து வெளியேறிய சில நாட்களிலேயே, சாரா பெர்குசன் தனது மகள்களுடன் அமெரிக்காவின் மியாமியில் அவரை சந்தித்ததாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த சந்திப்புக்கான விமானச் செலவினை எப்ஸ்டீனே ஏற்பாடு செய்ததாகவும் மின்னஞ்சல்கள் காட்டுகின்றன.
மேலும், சில மின்னஞ்சல் பரிமாற்றங்களில், இளவரசி யூஜினியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இளவரசர் அன்ட்றூ மீது பிரிட்டன் காவல்துறை புதிய குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2010ஆம் ஆண்டு வர்த்தக தூதராக இருந்தபோது ரகசிய தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்ட்ரூ முன்பும் எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்ததை மறுத்து வந்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக அவர் இதுவரை புதிய கருத்து வெளியிடவில்லை.
பிரித்தானிய அரச குடும்பம் மீதான நம்பிக்கையும், அதன் மதிப்பும் இச்சர்ச்சையால் மீண்டும் சோதனைக்குள்ளாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.