சமரசத்துக்கு வந்தது இங்கிலாந்து இளவரசர் அண்ட்ரூவுக்கு எதிரான வழக்கு!
இங்கிலாந்து இளவரசர் அண்ட்ரூவுக்கு எதிராக அமெரிக்காவில், கியூஃப்ரே என்ற பெண்ணால் தொடரப்பட்ட குடியியல் பாலியல் வன்கொடுமை வழக்கு சமரசத்துக்கு வந்துள்ளது.
தனக்கு 17 வயதாக இருந்தபோது, இளவரசர் அண்ட்ரூ மூன்று முறை, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி, கியூஃப்ரே வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இளவரசரும், கியுஃப்ரேயும் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடிதம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யபப்பட்டது.
அதில், வன்கொடுமை குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத இளவரசர், வெளியிடப்படாத பணத்தொகை ஒன்றை கியுஃப்ரேக்கு செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்காளியின் சட்டத்தரணி டேவிட் போய்ஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் சட்டத்தரணிகளுடன் இணைந்து சமரசத்தீர்வை எட்டியுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்தநிலையில் இளவரசர் வழங்கும் நிதித்தொகையின் கணிசமான பங்கு, கியூஃப்ரேயின் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும் சமரசக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சமரசரத் தீர்வு குறித்து இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
நிதி சமரசத்தீர்வின் சரியான தொகை வெளியிடப்படவில்லை என்றாலும், அது மில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் இங்கிலாந்தின் மன்னராட்சிக்கு எதிரான குழுவின் உறுப்பினரான
கிரஹாம் ஸ்மித், இந்த சமரசத் தீர்வுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை வரி
செலுத்துவோர் அறியத் தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார்.