இலங்கையின் பிரதமராக பதவியேற்றவுடன் தினேஷ் குணவர்தனவின் முதல் அறிவிப்பு
ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று காலை தினேஷ் குணவர்தன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் பதிவான சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன (Video) |
அத்துடன் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் என அறிவித்துள்ளார்.
இதேவேளை நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பது, இதற்கு முன்னர் நாம் சந்தித்திராத ஒன்றாகும். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம்.
இன்று நாம் அமைச்சரவையை நியமித்த பின்னர், நாம் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளோம். எமது பயணத்தை மீண்டும் சக்திமிக்கதாக மாற்ற நாம் நடவடிக்கை எடுப்போம்.
மக்களின் கோரிக்கைள் அனைத்தையும் கருத்திற்கொண்டே நாம் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் அரசமைப்பை விரைவில் மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவை அத்தியாவசியமாகும். நாட்டில் எரிவாயு மற்றும் உரப் பிரச்சினை இருந்தது. இவற்றை நாம் நிவர்த்தி செய்துள்ளோம்.
அதேபோன்று, எரிபொருள் பிரச்சினை உள்ளது. இதனையும் விரைவில் நிவர்த்தி செய்வோம். எமக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, அரசியல் பேதமின்றி செயற்பட தயாராகவே உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.