மகிந்த பதவி விலகுவதாக வெளியான செய்தி தொடர்பில் சற்று முன்னர் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள நிலையில் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச எந்த குழுவினருக்கும் தெரிவிக்கவில்லை என பிரதமர் அலுவகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், சுயேட்சை மற்றும் மத குழுவினருடன் கலந்துரையாடும் போது, நாடாளுமன்றத்தில் 100இற்கும் அதிகமான ஆதரவு உள்ள போதும் தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் அறிவித்ததாக கூறப்படும் விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை.
பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு தாம் உட்பட 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக இன்றைய தினம் உதய கம்மன்பில ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் அலுவலகம் இந்த விடயத்தை கூறியுள்ளது.
அத்துடன் பிரதமர் பதவி விலகுவதை தடுக்கும் நோக்கில் அவரது அதிகாரங்களை சில குழுக்கள் பயன்படுத்துவதாகவும், அவ்வாறு தொடர்ச்சியாக செயற்பாடுகள் பதிவாகுமாயின் அவர்களின் பெயர்களை வெளியிடுவதாகவும் உதய கம்மன்பில இன்று தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் குறித்த கூற்றுக்கள் பொய்யானவை எனவும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் உதய கம்மன்பில மேற்கொள்ளும் முயற்சி எனவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.