கடந்த காலத்தைப் பற்றி பேசி பயனில்லை - இத்தாலியில் வலியுறுத்திய பிரதமர் மஹிந்த
தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன மிக முக்கியமான சவால்களாகும் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தாலியின், போலோக்னா நகரில் நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான நேற்றைய முதலாவது அமர்வில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு தேசத்தின் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது. பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும்போது எமது எதிர்காலம், ஒரே தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது.
இன, மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை என்பன எமது பிராந்தியத்தின் முக்கிய அம்சமாகும். எமது நாடுகளில் பல்வேறு இன, மத மற்றும் கலாசார பின்னணிகளை கொண்ட மக்கள் வசிக்கின்றனர்.
எனினும், இந்த வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து, பல்வேறு சமூகங்களை இணைத்து முதிர்நிலை தேசம் என்ற உணர்வை கட்டியெழுப்பும் சவாலுக்கு நாம் பதிலளித்துள்ளோம்.
தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன மிக முக்கியமான சவால்களாகும். இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் சோகமான சம்பவங்களை நினைவுகூர வேண்டும்.
அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாம் அத்துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகள் மற்றும் அவர்களினால் கூறப்படும் நோக்கம் என்னவாக இருப்பினும் இந்த சம்பவம் அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.
கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. நவீன தேவைகளுக்கேற்ப கல்வியின் உள்ளடக்கத்தை திருத்துதல் மற்றும் இளைஞர்களை திருப்திகரமான வாழ்வாதாரத்தை நோக்கி ஈடுபடுத்துவதற்கே இலங்கை அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளது.
முழு உலகமும் தற்போது எதிர்நோக்கியுள்ள கடுமையான சுகாதார நெருக்கடி, அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவியுள்ளது. கோவிட் - 19 நெருக்கடியானது பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் நாகரிகங்கள் என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொற்றிலிருந்து தப்பித்து மீண்டும் வாழ்வை ஆரம்பிக்க வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும்.
நவீன மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் பிற பாதுகாப்புகள் உலகம் முழுவதும் காணப்பட வேண்டியதுடன், சர்வதேச அமைப்பு மற்றும் வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார ரீதியில் வலுவற்ற நாடுகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இது சிலர் மாத்திரமன்றி அனைவரும் வெற்றி பெறுவதற்கான போராட்டமாகும். கோவிட் தொற்று காரணமாக நாடுகள் தமது எல்லையை தற்காலிகமாக மூடுவது உகந்தது என்ற போதிலும், தனிமைப்படுத்தல் என்பது அதற்கு தீர்வல்ல.
அத்துடன் நல்லிணக்கம் என்பது காலத்தின் முக்கியமான தேவையாகும். கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
சகோதரத்துவம் மற்றும் புரிதலின் ஊடாக உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.