மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ஆலோசனை
பிரதமர் மகிந்த ராஜபக்ச கடற்றொழில் அமைச்சராகச் செயற்பட்ட காலப்பகுதியில், அவரது எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட 'மீனவ கிராமங்களை' அபிவிருத்தி செய்வதற்கு வீடமைப்பு விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் கடற்றொழில் அமைச்சராகச் சேவையாற்றிய காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள கடலோரப் பிரதேசங்கள் மற்றும் குளங்களை அண்மித்ததாக 60 மீனவ கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த மீனவ கிராமங்களை மேம்படுத்தி அபிவிருத்தி செய்தல், பராமரித்தல் மற்றும் அக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது பிரதமர் எடுத்துரைத்தார்.
அம்மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு 2022 வரவு செலவுத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்க வேண்டிய முன்மொழிவைத் தயாரிக்குமாறு பிரதமர் தனக்கு ஆலோசனை வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பிரதமர் ஊடக பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த மீனவ கிராமத்தை அண்மித்ததாக புதிய வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் இராஜாங்க அமைச்சருக்கு இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.