அருட்தந்தை தாக்குதல் விவகாரம்:கொழும்பு ஆயர் இல்லம் எடுத்த அதிரடி நடவடிக்கை
நீர்கொழும்பு கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கொழும்பு மறை மாவட்ட ஆயர் இல்லம் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது,
ஆயர் இல்லத்தின் சட்ட நடவடிக்கை
அருட்தந்தை ஒருவரை நேற்று (25.01.2026) தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாகக் கூறினார்.
கம்பஹா பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்ட அருட்தந்தை மிலன் பிரியதர்ஷனவின் சார்பாக இந்த அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்படுவதாக அருட்தந்தை பெர்னாண்டோ தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் அதிகாரிகள் பாதிரியாரைச் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர். பொலிஸார் எந்த உத்தரவையும் பெறவில்லை என்று அருட்தந்தை பிரியதர்ஷன வலியுறுத்திய போதிலும், பொலிஸாரின் உத்தரவை மீறியதாக அருட்தந்தை மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
அருட்தந்தை பிரியதர்ஷன தற்போது நீர்கொழும்பு ஆதார வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸாரே ஒழுக்கம் இல்லையென்றால், அவர்களால் எவ்வாறு சமூகத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்று அருட்தந்தை பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.