மீன் விலை தொடர்பில் வெளியான தகவல்
பேலியகொட மீன் சந்தையில் மீனின் விலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என மத்திய மீன் சந்தை தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய மீன் சந்தையின் தலைவர் ஜெயசிறி விக்கிரமாராச்சி கருத்து தெரிவிக்கையில்,“மண்ணெண்ணெய் விலை குறைப்பு உண்மையில் அனைத்து மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி இழுவை உரிமையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்தலை நிறுத்தியுள்ளனர்.
விலை குறைப்பு
பேலியகொடை பிரதான மீன் சந்தையில் மீன்களின் விலை தற்போது வேகமாக உயர்ந்துள்ளது.
இந்த விலைக் குறைப்புடன் பல வழக்கமான கடற்தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்றும், இந்த நிலைமை பிரதான மீன் சந்தையில் மீன் கடை உரிமையாளர்களுக்கு மீன் விலையைக் குறைக்க உதவும் என்றும் நம்புகின்றோம்.
இந்த விலை குறைப்பு அடுத்த சில நாட்களில் வெளிமாவட்ட மீன் கடை உரிமையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பெரிதும் பயனளிக்கும்.
கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்த்தால் அது நுகர்வோர், உணவக வியாபாரிகள் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் என அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.”என தெரிவித்துள்ளார்.