வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரிகள்
நாட்டில் அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அத்துருகிரிய முதல் புதிய களனி பாலத்தின் நெடுஞ்சாலையை முடிக்கும் ஒப்பந்தத்தை, சீன நிறுவனத்துக்கு வழங்குமாறு, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கான உத்தேச பெறுமதி 550 அமெரிக்க டொலர்களாகும்.
சைனா காபரிங் கோப்பரேசனுக்கே இந்த ஒப்பந்தத்தை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனம்
இந்த அதிகாரிகள், தற்போதும் சீன நிறுவனத்துடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையின் மிக மோசமான கடன் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்குள் டொலர்களை ஈர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகவே தாம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த அதிகாரிகள் நியாயம் கூறியுள்ளனர்.
இலங்கை ஏற்கனவே வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தாதன் காரணமாக, சீனா எக்சிம் வங்கி அல்லது பிற ஆதாரங்களில் இருந்து இலங்கை உடனடியாக கடனை பெறமுடியாது என்பதால் இந்த திட்டத்தின் மூலம் இலங்கைக்குள் டொலர்களை பெற்று அதனை திருப்பி செலுத்த முடியும் என்றே குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம்
எனினும் இது நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு எதிரான செயற்பாடு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிராக இரண்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சுற்றாடல் பாதிப்பு தொடர்பிலேயே இந்த இரண்டு வழக்குகளும் தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.