அரச வங்கியின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி காரியாலயம்
மாதம் ஒன்றுக்கு 2200 அமெரிக்க டொலர்கள் செலவழித்து அதிகாரி ஒருவரை கட்டாருக்கு அனுப்புவதற்கு, அரச வங்கி ஒன்று விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி காரியாலம் நிராகரித்துள்ளது.
அரச வங்கியொன்றின் பிரதி முகாமையாளரை இரண்டு வருட காலத்திற்கு கட்டாருக்கு கடமை விடுப்பில் அனுப்புமாறு விடுத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கிக்கு விடுத்த அறிவிப்பு
குறித்த அதிகாரியை ஒரு மாதத்திற்கு கட்டாரில் தங்கவைப்பதற்கான வங்கியின் செலவுகள் சுமார் 726,000 ரூபாவாகும். இது இரண்டு வருட காலப்பகுதியில் 17 மில்லியன் ரூபாய்களாக இருக்கும் என ஜனாதிபதி காரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் குறித்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி காரியாலயம், தமது வைப்புத் தொகையாளர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இவ்வாறு செலவிட வேண்டாம் என வங்கிக்கு அறிவித்துள்ளது.
அத்துடன் இது போன்று அரச வங்கிகளிடமிருந்தும் கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இல்லை என ஜனாதிபதி காரியாலயம் திட்டவட்டமாக கூறியுள்ளது.