மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை முக்கிய சந்திப்பு!
மாகாண சபை தேர்தலைத் இந்த வருடம் நடத்த முடியுமா என்பது குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு ஜூன் மாதமளவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசு இன்னமும் உறுதியான கருத்தொன்றைத் தெரிவிக்காது உள்ளது. எனினும், உத்தியோகப்பூர்வமற்ற பேச்சுக்கள் அரசுக்குள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தேர்தலை ஜூன் மாதத்தில் அல்லது இந்த வருடம் நிறைவடைவதற்குள் நடத்த முடியுமா, அதற்கான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏதேனும் சிரமங்கள் உள்ளதா என்பது குறித்து ஆராயும் விதமாகவே நாளை பிற்பகல் ஜனாதிபதியுடன் சுகாதாரத் தரப்பினர் கலந்துரையாடவுள்ளனர்.
அதேபோல் நாட்டின் சகல மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்தையும் ஒன்றாக நடத்த முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் இந்தக் கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
இந்தச் சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அமைச்சர்கள், செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
