சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு
இலங்கை அரச தலைமைத்துவத்தினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற காத்திரமான செய்தி வெளிப்படுத்தப்பட வேண்டுமாயின் சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பதே தமிழ் மக்களுக்குள்ள ஒரே தெரிவாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அறிவித்துள்ளது.
குறித்த கட்சியினரால் நேற்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார இலக்குகள்
தமிழர் தேசத்தில் இன்றும் சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், ஊடாக கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் தமிழர் தேசத்தைச் இலங்கை அரசு எதிரி தேசமாகவே கருதி செயற்பட்டு வருகின்றது.
ஒற்றையாட்சி அரச கட்டமைப்பினுள் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் தமது கைகளில் இருக்கும்வரை தமிழர்களால் அரசுக்கு எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்த முடியாதெனக் கருதும் இலங்கை அரசு தமிழ் மக்களைத் தனது மக்களாகக் கருதாமல் எதிரிகளாகக் கருதி சிங்கள தேசத்தின் நலன்களை மட்டுமே பேணிச் செயற்பட்டு வருகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்தில் பாரியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்துகின்ற போதுதான் இனவாத அரசு தமிழ் மக்களின் கோரிக்கைகளை கருத்திலெடுக்கும் என்பதாலேயே 2009ற்கு முன்னர் இலங்கையின் பொருளாதார இலக்குகளைக் குறிவைத்து அதன் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதனால் மிகப்பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலேயே அரசு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு உடன்பட்டிருந்தது.
நாணய நிதியம்
இந்நிலையில், இலங்கையின் ஒட்டுமொத்த அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்தில் 48 சதவீதமான கொடுப்பனவுகள் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுவோருக்கே வழங்கப்படுகிறது.
இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையாக உள்ளது. பாதுகாப்புத் துறைக்கு வருடாந்தம் ஒதுக்குகின்ற நிதியைக் குறைக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாத நிலையில் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் கொதித்தெழும் போதெல்லாம் ஆயுதப்படையையும் பொலிஸாரையும் பயன்படுத்தியே தமிழ் மக்களை அடக்குகிறார்கள்.
ஒற்றையாட்சி முறையும் இனப்பிரச்சினையும்
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களாக வாழ்வதற்குரிய இறைமை, சுயநிர்ணய உரிமை கொண்ட சமஷடித் தீர்வே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையாகவும், புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல் தீர்வாகவும் அமைய முடியும்.
2009இல் பாரிய தமிழினவழிப்பு நடைபெற்றுள்ளதுடன், இன்றும் கட்டமைப்புசார் இனவழிப்பு செயற்பாடுகள் திட்டமிட்டு வேண்டுமென்றே சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் தொடர்ந்துவரும் நிலையில் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு முறைமையும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கருத முடியாது.
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளைப் பெறாமல் எவருமே வெல்லமுடியாத சூழலே உள்ளது. ஆனால், இப்படியான நிலையிருந்தும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தமிழ் மக்களுக்காக எதுவுமே செய்யத் தயாரில்லை.
தேர்தல் புறக்கணிப்பும் விளைவுகளும்
ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் மூலம் மூன்று விதமான செய்திகள் உணர்த்தப்படும். இத் தேர்தல் மூலம் ஜனாதிபதியாக வருபவர், தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததன் விளைவாகவே தன்னால் ஜனாதிபதியாக வெற்றிபெற முடிந்தது என்ற நிலைமையையும் தோற்றவர்கள், தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக நம்பிக்கையை கொடுத்திருந்தால் தங்களால் வென்றிருக்க முடியும் என்ற ஏக்கத்தையும் உருவாக்கும்.
தேர்தலில் வென்றவருங்கூட, தமிழ்மக்களின் வாக்குகள் இன்றி எதிர்காலத்தில் தன்னால் வெற்றிபெறமுடியாமல் போகும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டிய அச்சத்தையும் உருவாக்கும்.
[SQZTN\
தமிழ்; மக்கள் தமது வாக்குகளைத் தங்கள் இனநலன் சார்ந்தே இனிப் பயன்படுத்துவார்கள் என்பதும், இனியும் தமிழ் மக்களை வாக்களிக்கும் எடுபிடிகளாகப் பயன்படுத்த முடியாது என்ற காத்திரமான செய்தி பிராந்திய வல்லரசுக்கும் அதனுடன் இணைந்து செயற்படும் பூகோள ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களின் உள்ளூர் முகவர்களுக்கும் தெட்டத்தெளிவாக வழங்கப்படும்.
எனவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு
கொண்டுவரப்படல் வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழர் ஒற்றுமையாக
நிறைவேற்றப்போகும் இந்த ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல்
ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது
தமிழினத்துக்கே பாரிய பலத்தை வழங்கும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு
செயற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |