நிலக்கரி இறக்குமதி முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களை இந்த ஆணைக்குழு விரிவாக ஆராயும்.
குறிப்பாக, அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (CEB Lanka Coal Company), அதன் துணை நிறுவனங்கள் அல்லது தனியார் விநியோகஸ்தர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் அல்லது அரச நிதிக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க தலைமையிலான இந்த ஆணைக்குழுவில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் அமைச்சின் செயலாளர் பி.வி. பந்துலசேன இந்த ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றுவார்.
நிலக்கரி கொள்முதல், விநியோகம், தரம் கண்டறிதல் மற்றும் மின் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மீளாய்வு செய்வதுடன், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது ஒப்பந்த விதிகள் மீறப்பட்டதா என்பதைக் கண்டறிவதே இந்த ஆணைக்குழுவின் பிரதான பணியாகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் மூலம் முறைகேடுகளுக்குப் பொறுப்பான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் நிகழாத வண்ணம் முறையான பாதுகாப்பு நடைமுறைகளையும் சீர்திருத்தங்களையும் முன்மொழியுமாறு ஜனாதிபதி செயலகம் இந்த ஆணைக்குழுவிற்குப் பணித்துள்ளது.
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam