வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில்! பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொங்கல் தினம் கொண்டாட யாழ் வருகின்றார் ஆனால் எமது வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில் இருப்பதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வடமராட்சிக் கிழக்கில் அண்மைய நாட்களாக இந்திய இழுவை மடி படகுகள் சுதந்திரமாக,எந்தவித கைது அச்சமும் இன்றி தொழில் செய்து வருகிறார்கள் கரைக்கு அண்ணளவாக வந்து கடற்படை தளத்திற்கு அருகில் பயமின்றி துணிச்சலாக எப்படி அவர்களால் தொழில் செய்ய முடிகின்றது?
கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரம்
எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கின்றது, கடற்படை அவர்களை கைது செய்யவில்லை. அண்மையில் கூட இந்திய துணை தூதுவரை சந்தித்து கடற்றொழிலாளர்கள் உடைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம்.
ஆனாலும் இதுவரை இந்த பிரச்சனைகளுக்கான முடிவு எட்டப்படவில்லை இலங்கை கடலுக்குள் அத்துமீறி நுழைந்து எங்களுடைய வளங்களை அவர்கள் சுரண்டிச் செல்கிறார்கள்.

ஆனாலும் இலங்கை கடற்படையால் இவர்களை கைது செய்ய முடியும். இலங்கை கடற்படை இவர்களை கைது செய்யாதது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.
இந்த காலப்பகுதியில் வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதிகளில் இரால் அதிகமாக உற்பத்தியாகி பிடிக்கப்படுகின்ற காலம்.
இதனை அவர்கள் நன்கு அறிந்து அத்துமீறி நுழைந்து எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து செல்கிறார்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக, அத்துமீறி நுழையும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டியது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை.
இலங்கை தமிழர்கள்
இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் பாமர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.வருகின்ற இரண்டாம் திகதி பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கையினுடைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருக்கிறார்.
இங்கே வந்து பொங்கல் தினத்தை அவர் மகிழ்ச்சியாக கொண்டாடப் போகின்றார்.ஆனால் எங்களுடைய வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

ஜனாதிபதி பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடப் போகின்றார் ஆனால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் எப்படி பொங்கல் தினத்தை கொண்டாடுவது? உடனடியாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்று சொன்னால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் இந்த போராட்டங்களை வருகின்ற காலங்களில் விஸ்தரிப்பார்கள்.
இலங்கை தமிழர்களும் இந்திய தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் தமிழர்களின் பலம் கூடிவிடும் என்பதற்காகத்தான் இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் சண்டையிடவைத்து வேடிக்கை பார்ப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது இனிவரும் காலங்களில் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களை எதிர்த்து கடலில் இறங்கி போராட வேண்டிய ஒரு நிலைமைக்கு வரும் ஆகவே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்துமாறு முரளிதரன் மேலும் தெரிவித்தார்.