ஜனாதிபதி நிதியமைச்சராக பதவி வகிக்கக் கூடாது-காரணத்தை விளக்கும் விஜயதாச ராஜபக்ச
மக்கள் பிரதிநிதிகள் அரசியல் அதிகார தரப்பிடம் அடிமைகளாக மாறும் போது அவர்கள் எப்போதும் மக்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்கு நீண்ட வரி கொள்கை ஒன்று இருக்க வேண்டும்
கட்டாயமாக குறைந்தது 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் அல்லது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் வரி கொள்கை ஒன்று நாட்டுக்கு இருக்க வேண்டும். அத்துடன் நாட்டின் நீதி நிர்வாக அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் நாடாளுமன்றம் கூடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அங்கு பிரசன்னமாகி இருக்க வேண்டும். எவ்வாறாயினும் அடுத்த கடந்த சில தசாப்தங்களாக இந்த நிலைமை மாறியுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் நாட்டின் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை வகிப்பதன் காரணமாக நிதி சம்பந்தமாக எடுக்க வேண்டிய முடிவகள் மற்றும் பிரச்சினை ஏற்படும் போது அது சம்பந்தமாக மக்கள் பிரதிநிதிகளுக்கு கேள்வி எழுப்பும் வாய்ப்பு இல்லாமல் போனது.
ஜனாதிபதியின் கீழ் நிதியமைச்சு இருப்பது இரண்டு பொறுப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் போகும்
நிதியமைச்சர் பதவி தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் தொடர்புக்கொள்ள கூடிய ஒருவரிடம் இருக்க வேண்டும். இதற்கு பதிலாக நிதியமைச்சர் பதவிய ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வைத்துள்ளதன் காரணமாக நாடாளுமன்றத்திற்கு இருக்கும் நிதி அதிகாரம் இல்லாமல் போயுள்ளது.
கடந்த காலங்கள் முழுவதும் நிரந்த கொள்கைகளை நாட்டுக்கு முன்வைக்க முயற்சித்த போதிலும் எடுக்கப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க முடியாமல் போனது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய எந்த வகையிலும் ஜனாதிபதி பதவியை வகிக்கும் நபர், நிதியமைச்சர் பதவியை வகிக்க முடியாது.
இப்படியான நிலைமையின் கீழ் ஜனாதிபதி நிதியமைச்சு குறித்து கூடிய கவனம் செலுத்தும் போது, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகும்.
அத்துடன் ஜனாதிபதிக்கான பொறுப்புகள் குறித்து கூடிய கவனம் செலுத்தும் போது, நிதியமைச்சு சம்பந்தமான பொறுப்புகளை செய்ய முடியாமல் போகும் எனவும் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.