ஜனாதிபதியின் அறிக்கை நீதித்துறையின் மதிப்பை குறைக்கும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe)அறிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த அறிக்கை உயர் நீதிமன்றத்திற்கும் முழு நீதித்துறை அமைப்புக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்புத் தன்மை
பாலின சமத்துவ சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறுவுவது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது நாடாளுமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 'நீதித்துறையின் நரமாமிசம்' என்ற சொல்லாடலும், நாடாளுமன்ற தெரிவுக்குழு நிறுவல் விடயமும், நீதித்துறையின் மதிப்பை குறைக்கும் தன்மையை கொண்டவையாகும்.
எனவே எந்தவொரு வெளிப்புற அழுத்தங்களிலிருந்தும் சுதந்திரமாகவும் நீதித்துறை செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமது சங்கம் உறுதியாக நம்புவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |