ஜனாதிபதியின் தீர்மானத்தை பாராட்ட வேண்டும்-திலும் அமுனுகம
இனிமேல் கட்சிகளுக்கோ, தனிப்பட்ட நபர்களுக்கு தேவையற்ற வகையில் விளையாட அனுமதிக்க போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள தீர்மானம் சம்பந்தமாக நாடு என்ற வகையில் பாராட்ட வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டி தெற்கு பேருந்து சாலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் எந்த ஜனாதிபதிகளும் எடுக்காத தீர்மானத்தை ரணில் எடுத்துள்ளார்
நாங்கள் நாட்டின் சில ஜனாதிபதிகளிடம் எதிர்ப்பார்த்த தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி எடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையேற்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லை.
நாட்டின் சட்டத்தையும் அமைதியையும் சீர்குலைக்க இடமளிக்க போவதில்லை. தேவையற்ற போராட்டங்களை நடத்த இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக தெளிவாக கூறியுள்ளார்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு இதே நிலைதான். ஜனாதிபதியின் இந்த கருத்து நாட்டில் முதலீடு செய்ய எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்கள் மிகப் பெரிய பலத்தை கொடுத்துள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் எமது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து நம்பிக்கை உருவாகியுள்ளது. மீண்டும் நாட்டில் முதலீடு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,
அக்கறை காட்டி வருகின்றனர். எமது நாட்டின் ஜனாதிபதி ஓரளவுக்கு ஹிட்லர் போன்று தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று இதற்கு முன்னர் நான் கூறியிருக்கின்றேன்.
தேவை என்றால், ஹிட்லர் போல செயற்படவும் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளார். இதனை தேசிய ரீதியாக மாத்திரமல்ல சர்வதேச ரீதியாகவும் முக்கியமான பிரயோசமான கருத்தாக நாங்கள் பார்க்கின்றோம்.
கொரோனா காலத்தில் பொருளாதார சரியாக முகாமைத்துவம் செய்யப்படவில்லை
கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சரியாக முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்பதை விருப்பமின்றியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வறிய நாடு என்ற காரணத்தில் இது எம்மை சற்று அதிகமாக பாதித்துள்ளது.
வரிசைகள் ஏற்படுவதை தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இருந்தது. அன்று ஏதோ தவறு நடந்ததாக நாங்கள் நினைக்கின்றோம். இதன் காரணமாக பல்வேறு குழுக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தன. சிலர் போராட்டம் என்றனர்.
சிலர் மக்கள் சக்தி என்றனர். குரங்கள் போன்ற செயற்பட்டு அரச அலுவலகங்களில் கூரைகளில் ஏறி சேதங்களை விளைவித்தனர். தீயிட்டனர். இதன் காரணமாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்தது எனவும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.