சுரேஷ் சலேவிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இந்த பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை மூன்றாவது முறையாகத் தடுத்து வைக்கும் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்த்து, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற “சலேவுக்கான நீதி - உரையாடல் அரங்கம்” என்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும் தாமதிக்காமல் அவரை உடனடியாக சட்டத்தின் முன், அதாவது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கத்தினை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.