ஜனாதிபதி ரணில் நாடு திரும்பியதும் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றம்!
சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் அமைச்சரவையிலும், பாதுகாப்பு அணிகள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத்திலும் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம்
அமைச்சரவை மாற்றம் கட்டாயம் இடம்பெறும் என்றும், இதன்போது தற்போதைய சுகாதார அமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் மாற்றப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மூன்று வார கால பதவி நீடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைகின்ற நிலையில், புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசமைப்புச் சபைக்கு சிபாரிசு செய்யப்பட்டு அவருக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவருகின்றது.
தேசபந்து தென்னக்கோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆதரவு அளித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
படுதோல்வியை சந்தித்த கட்சி
இதேவேளை, 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சொந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிக்கின்றது.
கட்சியை மீண்டும் ஒன்றிணைத்து வலுப்படுத்துவதற்காக சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும் நவம்பர் மாதத்துக்கு பின்னர் கிராம மட்டத்திலிருந்து பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.