அரசின் உத்தியோகபூர்வ மாளிகைகளில் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் கணக்காய்வு
ஜனாதிபதி மாளிகை உட்பட கொழும்பு நகரில் உள்ள அரச மாளிகைகளில் போராட்டகாரர்களால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் பெறுமதிகள் தொடர்பிலான கணக்காய்வை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
பெறுமதியான சொத்துக்கள் அழிப்பு
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் தொல்லியல் பெறுமதியான பல சொத்துக்கள் அழிந்து போயுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தொல் பொருள் கட்டளைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இந்த அழிவுகள் சம்பந்தமாக திணைக்களம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது.அரச மாளிகைகளில் அழிவடைந்த சொத்துக்களில் தொல்லியல் பெறுமதிமிக்க பொருட்கள் பல அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை
கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்கள், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை கைப்பற்றி அவற்றுக்குள் தங்கி இருந்தனர்.
இதன் போது அவர்களில் சிலர் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் சில பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



