இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எதிர்வரும் 15 ஆம் திகதி வட மாகாணம் வருகை தரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கை ஒன்றினை தெரிவிக்க வேண்டும் என அகில இலங்கை கடற்றொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளர் என்.பி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வட மாகாணம் குறிப்பாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரும்பாலான பாதிப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.
நாங்கள் பலமுறை ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதிகளுக்கும் இந்திய தூதுவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சர்களுக்கும் மனுவைக் கொடுத்து களைத்து விட்டோம்.
இந்திய அத்துமீறிய இழுவை மடிப் படகுகள்
இந்த வாரமும் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை மடிப் படகுகள் கரையை அன்மித்த பகுதி வரை சுதந்திரமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் சிலரை மட்டும் கடற்படையினர் கைது செய்கின்ற நிலையில் அநேகமான படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இதன் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன் எமது கடல் எமக்கானதா என்ற கேள்வியும் எழுகின்றது.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் வருகை தந்துள்ளார் என நினைக்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் கடற்றொழிலாளர்கள் சமூகப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.அவர் எம்மை சந்திப்பதற்கு பின் நிற்பது இந்தியாவின் அழுத்தம் ஏதும் காரணமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
உரிய ஏற்பாடு
மேலும் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.
அனர்த்த நிலமைகள் தொடர்பில் பார்வையிட மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவித்த நிலையிலும் எமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

ஆகவே வடக்கு வரும் ஜனாதிபதி கடற்றொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு, இந்தியாவின் அத்துமீறிய கடற்றொழில் தொடர்பில் எமது ஆதங்கங்களை முன்வைப்பதற்கு கடற்றொழில் சமூகத்தை சந்திப்பதற்கு உரிய ஏற்பாடுகளை உரிய தரப்பினர்கள் மேற்கொண்டு தர வண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.