ஜனாதிபதியுடனான சந்திப்பினை கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காக பேச வேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஜனாதிபதியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக நாங்கள் அறிகிறோம். அதனை அவர்கள் புறக்கணிக்க வேண்டும் என கோருகிறோம்.
அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள இந்நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதனை விட இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமக்கான உரிமைகளையும் , எமக்கான நீதியையும் பெற அவர்கள் அணிதிரள வேண்டும்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் , பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடான பேச்சுக்களை புறக்கணிக்க வேண்டும். ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்வார்கள் ஆயின் அது எமக்கு இழைக்கப்படும் அநீதி மாத்திரமல்ல , துரோகமும் கூட.
எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும்.
கொடூர யுத்தத்தை நடத்தி , எமது இனத்தினை அழித்தவர்களுக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றினையை வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் ஆட்டம் கண்டு கொண்டு உள்ளது. இந் நேரத்தில் நாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போராட்ட முன்வர வேண்டும்.
இந்த இன்னல்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் நேற்றைய தினம் போராட்டத்தினை நடாத்தி இருந்தோம். அதன் போது, வயது முதிர்ந்த தாய்மார்களை ஈவிரக்கமின்றி குண்டாந்தடிகளால் அடித்தும், சப்பாத்து கால்கள் மிதித்தும் எங்களை அவமானப்படுத்தி அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர்.
எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும்.
எங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என சொல்ல முடியாதவர்கள், இன்று மக்களுக்கு அரிசி இல்லை, பெற்றோல் இல்லை, டீசல் இல்லை என சொல்லுபவர்கள் வடக்கில் வந்து பொருளாதார நிலையத்தை திறக்கின்றார்கள்.
அவர்களிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியும் வரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எங்களின் போராட்டம் தொடரும். எமக்கு பின்னால் நின்று எமக்காக குரல் கொடுக்க எமது தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
நேற்றைய போராட்டத்தின் போது எமது முல்லைத்தீவு மாவட்ட சங்க தலைவி
அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு வைத்திய சாலையில் சிகிச்சை
பெற்று வருகின்றார்.
அதேவேளை வவுனியா மாவட்ட தலைவியும் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தினம் சிகிச்சை பெற்று
வீடு திரும்பியுள்ளார் என மேலும் இதன்போது தெரிவித்துள்ளார்.