அடுத்த அமைச்சரை பதவி நீக்க தயாராகும் ஜனாதிபதி? - வெளியாகியுள்ள தகவல்
அரசாங்கத்தை விமர்சித்ததன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மற்றுமொரு அமைச்சரவை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார அல்லது உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமை, அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் சென்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இந்த அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.
அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து விலகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுசில் பிரேமஜயந்தவை இன்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தார்.