அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட அழைப்பு
அனைத்துக் கட்சி அரசாங்கம் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியுடன் உருவாகியுள்ள அரசியல் மற்றும் சமூக அமைதியின்மைக்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதற்கான பெரும் முயற்சிகளில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.
அதன்படி, முறையான பொருளாதார சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்த தேவையான ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சவால்களை வெற்றிகரமாக வெற்றிகொள்ள வேண்டும்
எவ்வாறாயினும், எமக்கு முன்னால் உள்ள சவால்களை வெற்றிகரமாக வெற்றிகொள்வதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பொது வேலைத்திட்டத்தின் மூலம் தீர்வு காண நாடாளுமன்றத்தில் தமது பிரதிநிதிகள் செயற்பட வேண்டும் என்பதே இந்த தருணத்தில் மக்களின் நோக்கமாகும். இது நம் அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இதன்படி, இந்த தேசியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்பின் 19வது திருத்தம் மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு அமைப்பு ஆகியவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க நான் ஒரு பரந்த உரையாடலைத் தொடங்க முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.