வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம்! நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை சில நிமிடங்களில் முடிவடைந்ததாகவும் இது திட்டமிடாத வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி எழுந்து சென்று விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோடடா கோ ஹோம்
Ouch! This is how the arrival of #SriLanka President @GotabayaR to @ParliamentLK a few minutes ago ended: #GotaGoHome2022. Unplanned and never happened in the history. He had to get up and leave. pic.twitter.com/zuXiyQodAs
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 5, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்ததுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் அமர்ந்திருந்தார்.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் சிறப்புரை ஒன்றை ஆற்றினார்.
இதன் போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தடையேற்படுத்தி, ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கோட்டா கோ ஹோம் என கோஷமிட்டு அவர்கள் ஜனாதிபதிக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி
இதனால், நாடாளுமன்ற அவையில் அமளி ஏற்பட்டது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எதிர்ப்பு மேலும் அதிகரித்ததால், சபாநாயகர் அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
அந்த சமயத்தில் அவையின் காட்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி அவையில் இருந்து செல்லும் விதம் அதில் பதிவாகி இருந்தது.
10 நிமிடங்களுக்கு பின்னர் நாடாளுமன்ற அவை மீண்டும் கூடிய போது, ஜனாதிபதி அவையில் இருக்கவில்லை.