இனப்பிரச்சினையை தீர்க்கும் ரணிலின் முயற்சி! கொழும்பில் நடத்தப்பட்ட முதல் சந்திப்பு
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போது சுமுகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம், இன நல்லிணக்கம் தொடர்பான கட்சித் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கான பாதை வரைபடத்தை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
முத்தரப்பு சந்திப்பு
இதில் ஒரு கட்டமாக கடந்த வியாழன் அன்று பேஜெட் வீதியில், உள்ள ஜனாதிபதியின் தற்காலிக இல்லத்தில் முத்தரப்பு சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
உடல்நலக் காரணங்களால் கூட்டமைப்பின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் குறித்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. சுமந்திரனின் பங்கேற்பு தமிழர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக அவர் மாறியிருப்பதை தெளிவாக்குகிறது.
மாகாண சபைத் தேர்தல்
வியாழன் அன்று, அவர் பல ஆலோசனைகளை வழங்கியதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. அவற்றுள் பிரதானமானது மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது ஆகும்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் மாகாண சபைச் சட்டத்தின் சகல ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு அவர் தற்போது வழங்கியிருக்கும் ஆலோசனையானது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மிகவும் ஒத்ததாகும்.
செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் இத்தகைய கொள்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியிருந்தது.
நல்லிணக்கப் பேச்சுவார்த்தை
இந்நிலையில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி, எதிர்வரும் செவ்வாய்கிழமை சந்திக்கும் போது, நல்லிணக்கப் பேச்சுவார்த்தைக்கான பாதை வரைபடத்தை கோடிட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்த விடயம், பணியாளர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டபோது, பொதுஜன பெரமுன இன நல்லிணக்கத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் தெற்கில் ஒரு பெரிய அரசியல் கட்சி என்ற வகையில், பொதியின் சில உள்ளடக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாக ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன நல்லிணக்கப் பொதியின் உருவாக்கத்துடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையும் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நோக்கத்திற்காக, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்க விரும்புகின்றார். இது தொடர்பில் அவர், வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஒட்டுமொத்த அரசியலமைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அந்த கலந்துரையாடலில் அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களும்
கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே எமது திட்டமாகும்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்றும்
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
