வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும்: யாழ். வந்த ஜனாதிபதி அநுர உறுதி
வடக்கில் கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளில், விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
யாழ். மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் இன்றைய(01.09.2025) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
கடற்றொழில் சமூகத்துக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், வடக்கில் கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு
கடந்த அரசுகள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்தவிதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பத் தற்போதைய அரசு பாடுபடுகின்றது என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், அதில் எந்தவிதமான அழுத்தத்துக்கும் இடமளிக்கப்படாது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



