லண்டனில் நடைபெறவுள்ள முதன்மை கரப்பந்தாட்ட சுற்றுத்தொடர்
இந்த வருட முதன்மை கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கான ஏலம் எடுத்தல் நிகழ்வு பிரித்தானியாவில் நடைப்பெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் கடந்த வருடம் அறிமுகமாகி இருந்த இந்த முதன்மை லீக் போட்டியானது, எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கு லண்டனிலுள்ள southall பகுதியிலுள்ள டோமர்ஸ்வெல் பொழுதுபோக்கு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவில் செயற்படும் கழகங்களின் கீழ் விளையாடிவரும் அனுபவமிக்க மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
VPL ஏலம் 2024
இப்போட்டியின் மூலம் வீரர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதுடன் புதிய தன்னம்பிக்கை மற்றும் நட்புறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த போட்டிக்கான முன்னேற்பாடாக இவ்வருடத்திற்குரிய போட்டிக்காக வீரர்களை ஏலமுறையில் எடுக்கும் - VPL ஏலம் 2024 எதிர்வரும் 13.03.2024 புதன்கிழமை லண்டன் மாநகரத்தின் ஹெயிஸ் என்னும் பகுதியிலுள்ள crystal மண்டபத்தில் பிற்பகல் 15.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏலமுறை என்பது பணத்தினை கொண்டு வீரர்கள் தெரிவு செய்யப்படாமல், 12 VPLஅணிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு, இப்புள்ளிகளை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை VPL அணிகளின் உரிமையாளர்களும் முகாமையாளர்களும் பெற்றுக்கொள்ளவார்கள்.
இந்த நிகழ்வில் இப்போட்டிக்கென உருவாக்கப்பட்ட 12 பிரிமியர் லீக் அணிகளின் அறிமுகம், அந்தந்த அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அணி முகாமையாளர்கள் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் வீரர்கள் ஏலம் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அத்துடன், இந்நிகழ்விற்கு VPL போட்டியின் அனுசரனையாளர்களும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் விசேட தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு
இதேவேளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இணையவழி மூலமும் ஒளிபரப்பப்பட ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன் இதனை கரப்பந்தாட்ட வீரர்கள், ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகள் நேரடி ஒளிபரப்பின் மூலம் கண்டு களிக்கலாம் என்பதைனை VPL குழுமத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வானது VPL - UKஇன் இயக்குனர் சுரேன் மற்றும் நிர்வாக குழுமம் உறுப்பினர்கள் சுரேஷ், குட்டி, வதனன், குகன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும் கடந்த வருட 2023க்கான ஏல நிகழ்வானதும் நேரடியாக ஒளிபரப்பாகி பல ஆயிரக்கானவர்களை மகிழ்விக்கச் செய்து பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.