பதுளையில் ரணிலின் வெற்றி தொடர்பாக செந்தில் தொண்டமானின் கணிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதுளை மாவட்டத்தில் ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று (16.09.2024) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் ரணிலுக்கு ஆதரவு வலுப்பெற்று வருகிறது. கடந்த ஒரு வார காலத்தில் செல்லும் இடமெல்லாம் ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவு வலுப்பெற்றுள்ளது.
மக்களின் ஆதரவுக்கான காரணம்
அதற்கான காரணத்தை ஆராயும் பொழுது, மக்களால் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிறகு எரிவாயு, பெட்ரோல் வரிசையில் மீண்டும் நிற்க முடியாது எனவும் தாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பதுளை மாவட்டத்தில் ரணிலின் வெற்றி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குளை பெற்று வெற்றி பெற உறுதி செய்யப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் சேவை செய்த அனைவரும் இந்த மேடையில் அமர்ந்துள்ளோம். சேவை செய்யாதவர்கள் எதிர் தரப்பினருடன் அமர்ந்துள்ளனர்.
மக்களை பொறுத்த மட்டில் சேவை செய்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் மாற்று கருத்து கிடையாது. நான் ரணில் விக்ரமசிங்கவிற்காக பிரசாரத்திற்காக வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் சென்றுள்ளேன். அவருக்கான ஆதரவு அதிகமாகவே உள்ளது.
ஜனாதிபதியின் வெற்றிக்கு பின்னால் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மலையக மக்களும் உள்ளனர். அதே போல தேர்தலுக்கு பின் மலையக மக்களின் வெற்றிக்கு பின்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |