அரசியல் தீர்வு ஜனநாயக வழியில் கிடைக்காத காரணத்தினால் ஆயுதம் ஏந்துகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு வந்தனர்!ஞா.சிறிநேசன்
கைதிகளை பொதுமன்னிப்பின் கீழோ சட்ட நடைமுறை மூலமாகவோ அரசியற் தீர்மானம் மூலமாகவோ விடுவிக்க வேண்டும்.அதன் மூலமாக எல்லா மக்களுக்கும் இந்த அரசு சமத்துவமாக நடந்துகொள்கின்றது என்ற உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து குறித்த பிரார்த்தனை வாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நீண்ட காலமாக வடக்கு கிழக்கு பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டு கைதிகளாக வைக்கப்பட்டிருக்கின்ற எமது தமிழ் உறவுகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வதற்காக நாங்கள் ஒன்றுகூடியிருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் இரண்டு மூன்று தசாப்த காலமாக விசாரணைகள் இன்றியும் விசாரணைகளோடும் எமது தமிழ் உறவுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த வேளையில், கொவிட்-19 தொற்று காரணமாக எமது கைதிகள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையில் அரசானது பொறுப்புடன் சிந்தித்து அவர்களை விடுதலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தெய்வத்தின் சந்நிதியில் நீண்ட காலமாக கைதிகளாக இருக்கின்ற எமது தமிழ் உறவுகள் விடுதலை பெற்று வரவேண்டும். அவர்கள் தங்களது குடும்பத்தோடு இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய சந்தர்ப்பத்தை ஆண்டவன் என ஒட்டுமொத்தமாக நாங்கள் இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம். அவர்கள் தைப்பொங்கலுக்கு முன்பாக விடுதலை பெற்று வரவேண்டும் என நாங்கள் ஒன்றாகக்கூடி ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்.
விடுதலை நோக்கத்திற்காக சென்றவர்கள் இன்று பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். நீதி அமைச்சர் அலிசப்றி அவர்களும் கூட இங்கு அரசியல் கைதிகள் எவருமில்லை இங்கிருப்பவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் என்று சொல்லியிருக்கின்றார்.
நீதி அமைச்சர் அலி சப்றி அவர்கள் இங்கிருப்பவர்கள் எவரும் அரசியற் கைதிகளல்ல பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் என்ற கருத்தினை சொல்லியிருக்கின்றார். எங்களை பொறுத்தமட்டில அவர்கள் விடுதலைக்காக இறங்கியவர்கள். அரசியற் பிரச்சினையை ஜனநாயக ரீதியாக தீர்க்க முடியாத காரணத்தினால் தான் அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்களே தவிர ஆசையோடு விளையாட்டாக ஆயுதம் ஏந்தவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு ஜனநாயக வழியில் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் ஆயுதம் ஏந்துகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு வந்திருக்கின்றார்கள். எனவே அவர்களை அரசியற் கைதியாகக் கருதி விடுவிக்க வேண்டும்.
ஜே.வி.பியினரும் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அவர்களை அரசியற் கைதியாக கருதி 1978ஆம் ஆண்டிற்குப் பின்னர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருக்கின்றார்கள்.
அவர்கள் சிங்கள போராளிகளாக இருக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு கிடைத்திருக்கின்றது. இவர்கள் தமிழ் போராளிகளாக இருக்கின்றபடியால் இவர்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பொதுமையாக சிந்தித்து நீதியான விடுதலையை ஏற்படுத்த வேண்டுமென்று இந்த இடத்தில் நீதி அமைச்சர்,பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆகியோரிடம் தமிழ் மக்களின் சார்பாக உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.