பங்களாதேஷின் தலைவிதிக்கு அப்பாற்பட்ட நிலைக்கு இலங்கை மாற்றமடையும்: பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை
வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரிடம் இந்த நாட்டை ஒப்படைத்தால் பங்களாதேஷின் தலைவிதிக்கு அப்பாற்பட்ட நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா இயலும் ஸ்ரீலங்கா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
“ கம்பஹா மாவட்டத்தில் நாட்டை நேசிக்கும் மற்றும் சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் உள்ளனர்.
பொருளாதார நெருக்கடியில்
அன்று மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் கம்பஹா மாவட்டத்தில் நாங்கள் மொட்டை கட்டியெழுப்பி அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு உழைத்தோம்.
அதற்கு கம்பஹா மாவட்ட மக்கள் எனக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அன்று பொருளாதார நெருக்கடியில் அனைவரும் ஓடிய போது இந்த நாட்டை மீட்டெடுக்கலாம் என நினைத்து நாட்டை காப்பாற்றி சவால்களை ஏற்று நாட்டை வழிநடத்திய தலைவனுக்காக உழைத்தவரை மீண்டும் இந்த நாட்டில் ஆட்சிக்கு கொண்டு வருவோம்.
நாங்கள் சவால்களை எதிர்கொள்ளும் அணி. இந்த வெற்றி எங்களுக்கு ஒரு பிரச்சினையல்ல.
இன்று பங்களாதேஷுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். ஒரு வாரிசு ஜனாதிபதியாக வந்து இரண்டு நாட்கள் செல்லவில்லை.
நாட்டின் பாதுகாப்பு
நாட்டின் பாதுகாப்பு தலைவரும் மத்திய வங்கி ஆளுநரும் இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அந்த நாட்டில் இன்றும் வன்முறைகள் தொடர்கின்றன.
தங்கள் கருத்தை மதிக்காதவர்கள் தெருவில் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கருத்தை ஏற்கவில்லை என்றால், அவர்கள் அவர்களை பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு வெளியே இழுத்து கொலை செய்கிறார்கள்.
அதுதான் நம் நாட்டின் தலைவிதியும். ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றதால் அந்த விதி பறிபோனது.
இவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்காமல் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர் ரணில் விக்ரமசிங்க என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |