மூதூர் பாலநகர் மைதானத்தை கழிவுக்கூளங்களால் ஆக்கிரமிக்கும் பிரதேச சபை
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பாலநகர் கிராமத்தில் அமைந்துள்ள பொது மைதானத்தை மூதூர் பிரதேச சபை கழிவுகளைக் கொட்டும் இடமாகப் பயன்படுத்தி ஆக்கிரமித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பாலநகர் மைதானமானது எமது முன்னோர்களின் காலத்தில் இருந்தே ஊர் மக்களின் பொதுப் பயன்பாட்டிலும், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கியமானதொரு இடம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கழிவுகளை கொட்டுதல்
மேலும் தெரிவிக்கையில், 2007ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்த மைதானத்தை சுத்தப்படுத்தி பராமரித்து வந்தனர்.
இருப்பினும், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக இந்த மைதானம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மூதூர் பிரதேச சபை, பிற பகுதிகளுக்கு கழிவுகளைக் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டி, இந்த மைதானத்திற்குள் கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் இந்தப் பகுதியில், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள்
இந்த மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரதான வீதி வழியாகவே தினசரி பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்து வருகின்றனர்.
கழிவுகளின் துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு காரணமாக இந்த வீதியை பயன்படுத்தும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.

தலைமுறைகள் கடந்து பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொது மைதானத்தை கழிவு மேடாக மாற்றுவதை பிரதேச சபை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மைதானத்தைச் சுத்திகரித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7